×

டெல்லியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் மோடி: தமிழில் வாழ்த்து தெரிவித்தார்

புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில், பொங்கல் பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, டெல்லியில் உள்ள ஒன்றிய இணை யமைச்சர் எல்.முருகனின் வீட்டில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். புது மண்பானையில் அமைச்சர் எல்.முருகன், அவரது மனைவி ஆகியோர் பொங்கல் வைத்தனர். பிரதமர் மோடி பச்சரியை பானையில் போட்டு, பானை பொங்கியதும், ‘பொங்கலோ பொங்கல்’ என உற்சாகமாக குரல் எழுப்பினர்.அங்கு கட்டப்பட்டிருந்த மாட்டுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவற்றை மோடி மிகுந்த ஆர்வதோடு கண்டு ரசித்தார்.

விழாவில் மோடி, ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என தமிழில் வாழ்த்து தெரிவித்து பேசுகையில், ‘‘பொங்கல் விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். நமது ஒவ்வொரு விழாவும் விவசாயிகளுடன் தொடர்புடையது. சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் உள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமானது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது. மக்களை இணைக்கும் பணியைத்தான் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா சங்கமம் செய்கின்றன. பொங்கல் பண்டிகையானது ‘ஒரே பாரதம் சிறந்த பாரதம்’ என்கிற உணர்வை தருகிறது’’ என்றார். இவ்விழாவில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன், வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பாஜ பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post டெல்லியில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் மோடி: தமிழில் வாழ்த்து தெரிவித்தார் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Internet Minister ,L. PM Modi ,Pongal festival ,Murugan ,New Delhi ,EU ,Minister ,Pongal ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...